முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை நிறை வேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்கான விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு பொருத்தமான வாடகைக்கு வீடொன்றை ராஜபக்ச தரப்பினர் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெதமுலனவில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு மகிந்த ராஜபக்ஷ விரும்பினாலும் அவரின் உடல்நி லையை கருத்திற்கொண்டு மருத்துவ தேவைகளுக்காக அவர் கொழும்பில் தங்கியிருக்க வேண்டும் என்பதனால் கொழும்பிலேயே பொருத்தமான வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பிள்ளைகளின் வீட்டில் அவர் தங்கிருக்க முடியுமென்றாலும், பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அங்கு அவரால் தங்கியிருப்பதில் காணப்படும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கக்கூடிய பொருத்தமான வீடொன்றை தேடி வருவதாகவும், இதன்படி பொருத்தமான பல்வேறு வீடுகள் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் இதுவரையில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன